ஏஐ வசதியுடன் பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த கூகுள் டிரைவ்

தவறுதலாக ஒரே பக்கம் மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டால், ‘டூப்ளிகேட் டிடெக்ஷன்’ வசதி அதை அடையாளம் கண்டு நீக்குகிறது
ஏஐ வசதியுடன்  பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த கூகுள் டிரைவ்
Published on

கூகுள் தனது கூகுள் டிரைவ் செயலியில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சப்போர்ட் உடன் செயல்படும் புதிய ஆவண ஸ்கேனர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்தங்கள், விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கையெழுத்து குறிப்புகள் உள்ளிட்டவற்றை மொபைல் போனிலேயே எளிதாக டிஜிட்டல் வடிவமாக மாற்றும் வகையில் இந்த புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இதில் இடம்பெற்றுள்ள ‘ஸ்மார்ட் பேட்ச் ஸ்கேனிங்’ தொழில்நுட்பம் மூலம் பல பக்கங்களை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்து, அவற்றை தானாகவே ஒரே பி.டி.எப். கோப்பாக இணைக்க முடியும். மேலும், ‘ஆட்டோ பெஸ்ட் பிரேம்’ வசதி தெளிவற்ற அல்லது மங்கலாக பதிவான பக்கங்களை கண்டறிந்து, அவற்றுக்கு மாற்றாக சிறந்த தரத்தில் உள்ள படங்களை தானாகத் தேர்வு செய்கிறது.

டூப்ளிகேட்

அதேபோல், தவறுதலாக ஒரே பக்கம் மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டால், ‘டூப்ளிகேட் டிடெக்ஷன்’ வசதி அதை அடையாளம் கண்டு நீக்குகிறது. இதன் மூலம் தேவையற்ற நகல் பக்கங்கள் சேர்வது தவிர்க்கப்படுகிறது. இந்த அனைத்து ஏ.ஐ. அம்சங்களும் இணைய இணைப்பு இன்றியே சாதனத்திலேயே செயல்படுவதால், தனிப்பட்ட ஆவணங்கள் கிளவுட் சேமிப்பகங்களுக்கு அனுப்பப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு சாதனங்கள்

புதிய ‘மெட்டீரியல் 3 எக்ஸ்பிரசிவ்’ வடிவமைப்புடன், ஆவணங்களை நிர்வகிக்கும் பயனர் இடைமுகமும் மேலும் கவர்ச்சிகரமாகவும் எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது குறைந்தபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு இந்த வசதி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் அடிக்கடி ஆவணங்களை ஸ்கேன் செய்யும் பயனர்களுக்கு இது நேரத்தை மிச்சப்படுத்தும் பயனுள்ள மேம்படுத்தலாக அமையும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com