பாலியல் குற்றச்சாட்டுகள்; உயரதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கூகுள் நிறுவன ஊழியர்கள் போராட்டம்

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டுகள்; உயரதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கூகுள் நிறுவன ஊழியர்கள் போராட்டம்
Published on

சான் பிரான்சிஸ்கோ,

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில் ஆண்ட்ராய்டு மென்பொருளை உருவாக்கிய ஆன்டி ரூபின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கப்பட்டு இருந்தன.

அவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் நம்பக தன்மை கொண்டவை என கூகுள் நிறுவனம் முடிவு செய்த பின்பும் அவருக்கு ரூ.650 கோடிக்கும் கூடுதலாக ஒப்பந்த முறிவு தொகை வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு டுவிட்டர் வழியே ஆன்டி மறுப்பு தெரிவித்துள்ளார். இதேபோன்று ரிச்சர்டு டிவால் உள்ளிட்ட மற்ற உயரதிகாரிகள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு தகவல்கள் வெளியாகின. ஆனால் டிவால் பதவி விலகி விட்டார் என்ற தகவலை நேற்று கூகுள் நிறுவனம் உறுதி செய்தது.

13 மூத்த மேலாளர்கள் உள்பட 48 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

எனினும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதுமுள்ள கூகுள் நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டோக்கியோ, சிங்கப்பூர், லண்டன் மற்றும் டப்ளின் ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேறி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com