கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்த பொறியாளர் பணிநீக்கம்

லாம்டா தொழில்நுட்பம், மனிதர்களைப் போல் மகிழ்ச்சி, துக்கம் என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும் என பிளேக் கூறினார்.
கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்த பொறியாளர் பணிநீக்கம்
Published on

வாஷிங்டன்,

மனிதர்களுடன் சக மனிதனைப் போல் அனைத்து விஷயங்களையும் உரையாடும் வகையில் 'லாம்டா' (LaMDA) என்ற பெயரில், மொழி சார்ந்து இயங்கக்கூடிய அதிநவீன செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழிநுட்பத்தை கூகுள் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் குழுவில் பணியாற்றிய பொறியாளரான பிளேக் லெமோயின் என்பவர், லாம்டா தொழில்நுட்பம் குறித்து பல்வேறு அதிர்ச்சியுட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த லாம்டா தொழில்நுட்பம், மனிதர்களைப் போல் மகிழ்ச்சி, துக்கம் என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும் எனவும், இதனால் மனிதர்கள் வருங்காலத்தில் பல்வேறு ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த கூகுள் நிறுவனம், பிளேக் லெமோயினுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கி அவரை வீட்டுக்கு அனுப்பியது. இந்நிலையில் பிளேக் லெமோயினை கூகுள் நிறுவனம் தற்போது அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனம், பிளேக் லெமோயின் தொடர்ந்து மன்னிக்க முடியாத வகையில் நிறுவனத்தின் விதிகளையும், தரவு பாதுகாப்பு கொள்கைகளையும் மீறியதால் அவரை பணியில் இருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளது.

அதே சமயம் லாம்டா தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் உரையாடலை புரிந்து கொண்டு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ஒரு நவீன நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் என கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com