

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிகளவில் முதலீடு செய்து வரும் கூகுள் நிறுவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 5 நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பணியில் இருந்து விலக விரும்பும் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது.மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இதேபோன்ற சலுகையை அறிவித்துள்ள நிலையில், கூகுளின் இந்த நடவடிக்கை வெளியாகி உள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக பணத்தை முதலீடு செய்யும் அதேவேளையில், நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்த கூகுள் இந்த முடிவை எடுத்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டம் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளில் உள்ள ஊழியர்களுக்குப் பொருந்தும். இந்தத் திட்டத்தை ஏற்று இதுவரை எத்தனை ஊழியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை. கடந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் சில குழுக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இந்த விருப்ப ஓய்வு திட்டம் பொருந்தாது. ஏஐ ஆராய்ச்சிப் பிரிவான டீப்மைண்ட் மற்றும் கூகுள் கிளவுட் ஆகியவற்றுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான இந்தப் பிரிவுகளில் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதுடன், கூடுதலாகப் புதிய பணியாளர்களையும் நியமிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் தாக்கம் சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே தெரியத் தொடங்கியுள்ளது. அங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் இந்தச் சலுகை வழங்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டவர்கள் ஆகஸ்டு மாதம் முதல் பணியில் இருந்து வெளியேறத் தொடங்கியதாக இந்த விவகாரம் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.