

கொழும்பு,
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்து. பின் 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவும், அதிகளவில் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவும் முன்னிலை வகித்தனர். இதனால் வெற்றி வேட்பாளரை அறிவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 52.25 சதவீத வாக்குகளை கோத்தபய ராஜபக்சே பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.