பிரார்த்தனையின் பலனால் வளர்ந்த உலகின் மிக நீள வெள்ளரிக்காய்

இங்கிலாந்தில் பிரார்த்தனை செய்து உலகின் மிக நீள வெள்ளரிக்காயை இந்தியர் ஒருவர் வளர்த்து உள்ளார்.
பிரார்த்தனையின் பலனால் வளர்ந்த உலகின் மிக நீள வெள்ளரிக்காய்
Published on

டெர்பை,

இங்கிலாந்து நாட்டின் டெர்பை நகரில் வசித்து வருபவர் ரகுபீர் சிங் சங்கேரா (வயது 75). இவர் தனது வீட்டின் காலியான இடத்தில் வெள்ளரிக்காய் தோட்டம் அமைத்து வளர்த்து வருகிறார். இதிலென்ன விசேஷம் என்றால், வழக்கம்போல் வெள்ளரிக்காய் தோட்டத்திற்கு நீர், உரம் ஆகியவற்றை இட்டு விட்டு அதன் அருகிலேயே சிங் அமர்ந்து கொள்கிறார்.

சீக்கியரான சிங் தங்களது கலாசாரத்தின்படி ஒவ்வொரு நாள் காலையும் மூல் மந்தர் எனப்படும் இறை வணக்கத்தினை செலுத்துகிறார். இதற்காக அவர் அதன் பக்கத்திலேயே இருக்கை ஒன்றை அமைத்து அதில் அமர்ந்து கொள்கிறார்.

ஒரு நாளைக்கு 3 மணிநேரம் இதுபோன்று அமர்ந்து கொண்டு பிரார்த்தனை செய்கிறார். இதனால் அது நன்றாக வளர்ச்சி அடையும் என நம்பிக்கை கொண்டுள்ளார். அது வீண் போகவில்லை.

அவர் இதுவரை தனது பிரார்த்தனையின் பலனால் 3 மிக நீள வெள்ளரிக்காயை வளர்த்து அவற்றை உண்டுள்ளார். இப்பொழுது வளர்ந்துள்ள வெள்ளரிக்காய் 51 அங்குலத்துடன் (129.54 சென்டி மீட்டர்) உலகின் மிக நீள வெள்ளரிக்காய் என்ற சாதனையை படைத்துள்ளது.

இதுபற்றி சிங் கூறும்பொழுது, உங்கள் குழந்தையை போன்று அதனை நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும் என கூறுகிறார். இந்தியாவில் விவசாயியாக இருந்த இவர், 1991ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.

இதற்கு முன் உலகின் மிக நீள வெள்ளரிக்காய் என்ற பெருமையை வேல்ஸ் நகரில் 42.13 அங்குலத்துடன் (107 சென்டி மீட்டர்) வளர்ந்த வெள்ளரிக்காய் பெற்றிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com