இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: ராஜபக்சே கட்சி 3-ல் இரு பங்கு பலத்துடன் ஆட்சியை பிடித்தது

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, ராஜபக்சே கட்சி 3-ல் இரு பங்கு பலத்துடன் ஆட்சியை பிடித்தது. 25 தமிழர்கள், எம்.பி.களாக தேர்வு பெற்றுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: ராஜபக்சே கட்சி 3-ல் இரு பங்கு பலத்துடன் ஆட்சியை பிடித்தது
Published on

கொழும்பு,

225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் கடந்த 5-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 70 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகின.

நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை நடந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் எதிர்பார்த்தபடியே அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரர் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோரின் கட்சியான எஸ்.எல்.பி.பி. (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா) கட்சி அபார வெற்றி பெற்றது. 3-ல் இரு பங்கு இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இந்த கட்சி தனியாக 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகள் 5 இடங்களை கைப்பற்றி உள்ளன. இதனால் இந்த அணியின் எண்ணிக்கை 150 என்ற இலக்கை அடைந்துள்ளது.

மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 18-ல் எஸ்.எல்.பி.பி. வென்று சாதனை படைத்துள்ளது. இந்தக் கட்சிக்கு கிடைத்த மொத்த ஓட்டுகள் 68 லட்சம் (59.9 சதவீதம்) ஆகும்.

இந்த தேர்தலில், 4 முறை பிரதமர் பதவி வகித்த ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு மரண அடி கிடைத்துள்ளது. ரனில் விக்ரமசிங்கேகூட தனது கொழும்பு மாவட்டத்தில் இருந்து தேர்வு பெற தவறிவிட்டார். அவரது கட்சி பெரும்பாலான தொகுதிகளில் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்த கட்சிக்கு சுமார் 2 லட்சம் ஓட்டுகள் (2 சதவீதம்) கிடைத்தன.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய சஜித் பிரேமதாசா, அந்த கட்சியில் இருந்து விலகி எஸ்.ஜே.பி. என்ற கட்சியை தொடங்கி, முஸ்லிம் கட்சியுடன் கரம் கோர்த்து தேர்தலை சந்தித்தார். இந்த அணி 55 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. திரிகோணமலை மாவட்டத்தில் அபார வெற்றியை இந்த கட்சி பதிவு செய்துள்ளது.

மொத்தமாக இந்த கட்சிக்கு 27 லட்சம் ஓட்டுகள் (23 சதவீதம்) கிடைத்துள்ளன.

இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக எஸ்.ஜே.பி.வந்துள்ளது.

முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாடாளுமன்ற தேர்தலில் சோபிக்கவில்லை. இந்த அணி தமிழர்கள் ஆதிக்கம் மிகுந்த வடக்கு பகுதியில் 3 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெற்ற வாக்குகள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 168 (2.82 சதவீதம்).

இருப்பினும் இலங்கை நாடாளுமன்றத்துக்கு 25 தமிழர்கள் பல்வேறு கட்சிகள் சார்பில் நேரடியாக தேர்வு பெற்றிருப்பதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் அங்கஜன் ராமநாதன், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தரப்பில் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சக்தி மனோ கணேசன், எஸ்.எல்.பி.பி. கட்சியின் ஜீவன் தொண்டமான், உள்ளிட்ட 25 தமிழர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சேவுக்கு முதலில் வாழ்த்து தெரிவித்த உலக தலைவர் என்ற பெயரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு மகிந்தா ராஜபக்சே நன்றி தெரிவித்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் வாழ்த்து தொலைபேசி அழைப்புக்கு நன்றி. இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன், நம் இரு நாடுகள் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க உங்களுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளேன். இலங்கையும், இந்தியாவும் நண்பர்கள், உறவுகள் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com