

ஏதேன்ஸ்,
கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சமப்வத்தில் 26 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக அகதிகள் 77 பேர் படகு மூலம் இன்று கிரீசுக்குள் நுழைய முயன்றனர். கிரீசின் கவ்டோஸ் தீவு அருகே சென்றபோது அகதிகள் படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிரீஸ் கடலோர காவல்ப்படையினர் விரைந்து சென்று 51 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த படகு விபத்தில் கடலில் மூழ்கிய எஞ்சிய 26 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை. கடலில் மூழ்கிய 26 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.