குஜராத் விமான விபத்து; உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்


குஜராத் விமான விபத்து; உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
x

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ விமானத்தில் 242 பேர் இருந்துள்ளனர்.

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.

விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என 'ஏர் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமான விபத்தை தொடர்ந்து 'ஏர் இந்தியா' நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்து வேதனையளிக்கிறது.

இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்த துயரமான தருணத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்திய மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மாலத்தீவு நாட்டின் அதிபர் முகமது முய்சு வெளியிட்டுள்ள பதிவில், "இந்த துயரமான நேரத்தில் இந்திய மக்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடன் மாலத்தீவு அரசும், அதன் மக்களும் உறுதுணையாக நிற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரதமர் இப்ராகிம் வெளியிட்டுள்ள பதிவில், "மலேசிய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் துக்கத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். நிவாரணப் பணிகள் தொடரும் வேளையில் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுடனும், இந்த பயங்கரமான இழப்பால் வாடுபவர்களுடனும் எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பா கமல் பிரசந்தா வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைதள பதிவில், "பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த துயரமான தருணத்தில் நேபாளம் இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள், குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

1 More update

Next Story