

வாஷிங்டன் டி.சி.
ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை பாதுகாக்கும் பணிக்காக, வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் நிருபர்களிடம் டிரம்ப் பேசும்போது, பூமியின் மிக முக்கிய கடல்சார் வழித்தடத்தில் ஒன்றான ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை பாதுகாக்கும் பணிக்காக, நிதி இழப்பீடாக அமெரிக்கா கட்டணம் பெற வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து அவர், சமீபத்தில் அமெரிக்கா நடத்திய ராணுவ தலையீடுகளால், ஈரானின் ராணுவ திறன் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது என்றும் பெருமிதத்துடன் கூறினார். இதன்பின்னர், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடல்சார் போக்குவரத்தில் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக, வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
சமீபத்தில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியது. இதனை தொடர்ந்து, இந்த பகுதியை எளிதில் கடந்து செல்லும் வகையில், வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளது என அந்நாடு தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, ஈரானிய படைகளின் திறனை குறைக்கும் வகையிலும், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியதற்கு பொறுப்பேற்க செய்யும் வகையிலும், அமெரிக்க பாதுகாப்பு படை தளபதியின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
ஈரானை இலக்காக வைத்து, ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படை மீண்டும் முற்றுகையிடும் என டிரம்ப் அறிவித்து உள்ளார். தொடர்ந்து அவர், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடந்து செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் கட்டணம் வசூலிப்போம் என கூறினார்.
ஈரானின் 84 சதவீத ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. வான் பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஆயுத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு விட்டன. 4 மாதங்களில் அவர்களை கற்காலத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம் என்றும் டிரம்ப் கூறினார்.