

ஜோகன்னஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவில் அரசியல் பிரமுகர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கேட்லெஹாங் நகர்ப்புற குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.. அங்குள்ள உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்றார்.இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் போலீசில் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர்களில் சிலர், தென் ஆப்பிரிக்காவின் முக்கிய அரசியல் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (ஏ.என்.சி.) இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து அரசியல் கொலைகளை விசாரிக்கும் சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் சமீப காலமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி, போட்டி தொடர்பாக நடைபெறும் கொலைகள் அதிகரித்து இருப்பது சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் அரசியல் உள்நோக்கத்துடன் 43 கொலைகள் நடந்துள்ளதாக சர்வதேச அமைப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் 4-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.