

ஜார்ஜ் டவுன்,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக கடந்த 18ம் தேதி சிறிய ரக கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 179 பேர் பயணித்தனர்.
கப்பல் நடுக்கடலில் பயணித்த போது தீடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர்.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 69 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், கடலில் மூழ்கிய 110 பேரின் நிலை என்ன? என்று தெரியவில்லை.
இதனால் கடலில் மூழ்கிய 110 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலில் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மாயமானவர்களில் 27 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய 83 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.