அமெரிக்க எச் - 1 பி விசா தேர்வு விகிதம் 75 சதவீதம் வரை உயர்வு

புதிய கட்டுப்பாடுகளால் அமெரிக்க நிறுவனங்கள், 'எச் 1 - பி' விசாவுக்கு நிதி அளிப்பதை குறைத்திருந்தன.
அமெரிக்க எச் - 1 பி விசா தேர்வு விகிதம் 75 சதவீதம் வரை உயர்வு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தார். அதன்படி வெளிநாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை பரஸ்பரம் உயர்த்துதல், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்துவது, வெளிநாட்டவர்கள் அதிகம் படிக்கும் பல்கலைக்கழகங்களில் நிதிகுறைப்பு போன்ற அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

மேலும் அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கான எச்-1பி விசா கட்டணத்தை ரூ.90 லட்சமாக உயர்த்தினார். இதனால் அமெரிக்காவில் அதிகளவில் தங்கி பணிபுரியபோகும் ஊழியர்கள், என்ஜினீயர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவான லாட்டரி முறை மாற்றப்பட்டு, உயர் ஊதிய பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு லாட்டரி முறையில் 4 வாய்ப்புகள் என்ற விதி கொண்டு வரப்பட்டது.

கட்டணம் தொடர்பான வழக்குகள் அமெரிக்க கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. டிரம்பின் இந்த முடிவு, அமெரிக்காவில் பணியாற்ற விரும்பிய நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது போன்ற கட்டுப்பாடுகளால் அமெரிக்க நிறுவனங்கள், 'எச் 1 - பி' விசாவுக்கு நிதி அளிப்பதை குறைத்தன. வழக்கமாக, 'எச் 1 - பி' விசாவுக்கு ஆண்டுக்கு, 7 லட்சம் விண்ணப்பங்கள் குவியும் நிலையில், இந்த ஆண்டு, 2.35 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.

இந்நிலையில், 'எச் 1 - பி' விசா விண்ணப்பதாரர்களின் லாட்டரி முறையிலான தேர்வு விகிதம் இந்த ஆண்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முன், 33 சதவீதமாக இருந்த தேர்வு வாய்ப்பு, இப்போது, 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க ஐ.டி., நிறுவனங்கள் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து, மூத்த பணியாளர்களை மட்டுமே பணியமர்த்தும் நிலைக்கு மாறியுள்ளன. இது நம் நாட்டு இளம் பொறியாளர்களுக்கு சவாலாக இருந்தாலும், உயர்திறன் கொண்டவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com