

வாஷிங்டன்,
அமெரிக்க விமானப் படையின் முக்கிய கிளவுட் கம்ப்யூட்டிங் கணினி தளமான 'கிளவுட் ஒன்' தளத்திற்குள் ஹேக்கர்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க விமானப் படை வீரர்களின் விவரங்கள், ஊதியம், தளவாடங்கள் பராமரிப்பு மற்றும் வான் பாதுகாப்பு ரேடார் தகவல்களை நிர்வகிக்கும் மிக முக்கியமான கட்டமைப்பாக இந்த 'கிளவுட் ஒன்' தளம் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற்றபோது, ஹேக்கர்களின் இந்த ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தளத்தில் புதிய செயலிகளை இணைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, மென்பொருள் புதுப்பிப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், சில பயனர்களின் நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதோ, இதன் மூலம் ரகசிய தகவல்கள் ஏதேனும் திருடப்பட்டதா என்பதோ இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ள அமெரிக்க விமானப் படை, தங்களது கணினி கட்டமைப்புகள் மற்றும் தகவல்களை பாதுகாக்க தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பான சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ ஆகியவற்றின் தரவுத்தளங்களில் அண்மையில் ஹேக்கர்கள் ஊடுருவியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விமானப் படையின் கணினி தளமும் ஹேக் செய்யப்பட்டிருப்பது அமெரிக்க பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.