13 இஸ்ரேலியப் பணயக்கைதிகளையும், 7 வெளிநாட்டினரையும் விடுவிக்கும் ஹமாஸ் ஆயுதப் பிரிவு

2-வது நாளாக போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படுவதையொட்டி மேலும் பல பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

காசா,

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் 7-ந் தேதி திடீர் தாக்குதல் நடத்திய பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அங்கு 1,200 பேரை கொன்று குவித்தனர். அதோடு பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும் நோக்கில் தரை, கடல், வான் என மும்முனைகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது. இதில் காசாவின் பெரும் பகுதி முற்றிலுமாக சிதைந்த நிலையில், அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். போரில் காசாவில் இதுவரை 14 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அதோடு போரின் விளைவாக காசாவில் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டு பல லட்சம் மக்கள் உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலகெங்கிலும் இருந்து கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்தை திட்டவட்டமாக நிராகரித்து இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்கவும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் தற்காலிகமாக போரை நிறுத்திவைக்க முன்வந்தது. அதன்படி ஹமாஸ் வசம் உள்ள 240 பணய கைதிகளில் 50 பேரை விடுவிக்க காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தப்படும் என கடந்த புதன்கிழமை இஸ்ரேல் அறிவித்தது.

அதை தொடர்ந்து வியாழக்கிழமையே போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தள்ளி போனது. அதன்படி நேற்று முன்தினம் காலை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனால் 7 வாரங்களாக தீவிர தாக்குதல்களை எதிர்கொண்டு வந்த காசாவில் சற்று அமைதியான சூழல் உருவானது.

இதனையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதல்கட்டமாக 9 பெண்கள், 4 சிறுவர்கள் என 13 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதோடு வெளிநாட்டவர்களை விடுவிக்கும் மற்றொரு தனி உடன்படிக்கைக்கு இணங்க 10 தாய்லாந்து நாட்டவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் காசாவில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே விடுதலை செய்யப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணய கைதிக்கும் ஈடாக 3 பாலஸ்தீன கைதிகளை விடுவிப்போம் என ஒப்பந்தத்தில் இஸ்ரேல் உறுதி அளித்திருந்தது.

அதன்படி ஹமாஸ் விடுவித்த 13 கைதிகளுக்கு ஈடாக 24 பெண்கள் உள்பட 39 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். 13 பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நேட்டன்யாகு வரவேற்றார். அதனை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பணய கைதிகளின் பெயர் விவரங்களை இஸ்ரேல் அரசு வெளியிட்டது.

விடுதலை செய்யப்பட்ட 13 பணய கைதிகளும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சூழலில் காசாவில் நேற்று 2-வது நாளாக போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. குண்டு மற்றும் துப்பாக்கி சத்தம் இன்றி காசா அமைதியாக காணப்பட்டது. போர் நிறுத்தத்தின் 2-வது நாளான நேற்று 2-வது கட்டமாக 8 சிறுவர்கள் உள்பட 14 பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதே போல் 14 பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து 42 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் 7 வெளிநாட்டவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் காசாவில் 'இன்றிரவு' ஒப்படைக்கப்படுவார்கள் என்று ஹமாசின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த இடமாற்றம் தாமதமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com