

உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான தொற்று ஆகும்
இந்தநிலையில் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள உசுஆயியாவில் இருந்து ஆப்ரிக்காவில் கேப் வெர்டே நோக்கி எம்.வி. ஹோண்டியஷ் என்ற உல்லாச கப்பல் செல்கிறது. தற்போது அட்லாண்டிக் கடலின் கேப்வெர்டே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 150 பயணியர் உள்ளனர். இந்த கப்பலில் பயணியருக்கு ஹண்டா வைரஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில்,
சொகுசு சுற்றுலா கப்பலான "எம்.வி. ஹோண்டியஷ் " கப்பலில் பயணம் செய்த மூன்று பேருக்கு "ஹண்டா " தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவர்கள் அவசர சிகிச்சைக்காக நெதர்லாந்து அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 5 பேருக்கு நோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கப்பலில் பயணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் வைரஸ் தாக்கி, ஏப். 11ல் உயிரிழந்தார். அவரது உடல் ஏப்.,24 வரை கப்பலில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது மனைவி அடுத்த மூன்று நாட்களில் நோய் பாதிப்பால் உயிரிழந்தார். தொடர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த நபரும் இந்த நோய்க்கு பலியானார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நோயால் பாதிக்கப்படுபவா்களில் 40 சதவீதம் போ் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா்.