தூங்கும்போது கூட உல்லாசத்தில் இருக்க சொல்வார்.... முன்னாள் கணவர் குறித்து இங்கிலாந்து பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

தனது திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் குறித்து கேட் எலிசபெத் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தூங்கும்போது கூட உல்லாசத்தில் இருக்க சொல்வார்.... முன்னாள் கணவர் குறித்து இங்கிலாந்து பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு
Published on

லண்டன்,

இங்கிலாந்தை சேர்ந்த பெண் அரசியல்வாதி கேட் எலிசபெத் நைவ்டன்(வயது 54). இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பர்ட்டன் தொகுதி எம்.பி.யாக 2019 முதல் 2024 வரை பதவி வகித்தார். இவர் தனது முன்னாள் கணவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆண்ட்ரூ கிரிபித்ஸ் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கேட் எலிசபெத் எம்.பி.யாக வெற்றி பெற்ற பர்ட்டன் தொகுதியில், அவருக்கு முன்பு 2010 முதல் 2019 வரை எம்.பி. ஆக இருந்தவர் ஆண்ட்ரு கிரிபித்ஸ். இவர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2018-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். ஆண்ட்ரூ கிரிபித்ஸ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக சித்ரவதை செய்ததாகவும் கேட் எலிசபெத் கோர்ட்டில் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தெரஸா மே ஆட்சின்போது, செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவராக வலம் வந்த ஆண்ட்ரூ, பெண்கள் உரிமைகளுக்காக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டவர் ஆவார். அதே சமயம், இவர் பதவியில் இருந்தபோது தனது அலுவலகத்தில் பணியாற்றிய 2 பெண்களுக்கு சுமார் 2,000 ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆண்ட்ரூ-கேட் தம்பதி பிரிவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்ற பின்னர், தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க கோரி கோர்ட்டில் ஆண்ட்ரூ வழக்கு தொடர்ந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த கேட், தன்னையும், தன் குழந்தையையும் ஆண்ட்ரூ கடுமையாக துன்புறுத்தினார் என்று கோர்ட்டில் தெரிவித்தார். இந்த வழக்கின் முடிவில் கேட் எலிசபெத்திற்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் குறித்து கேட் எலிசபெத் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவரால் தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து கேட் விரிவாக பேசியுள்ளார். அதில் ஆண்ட்ரூ குறித்து அவர் கூறுகையில், "வெளியில் இருந்து பார்க்கும்போது எங்கள் குடும்பம் இயல்பானதாக தெரிந்திருக்கும். ஆனால் உள்ளே மோசமான துன்புறுத்தல் நடந்து கொண்டிருந்தது.

நான் போலீசிடம் புகார் அளிக்கப் போகிறேன் என்று கூறியபோது, அவர் 'யாரும் உன்னை நம்பமாட்டார்கள். நான் ஒரு எம்.பி. ஆக இருக்கிறேன். எனக்கும் போலீசுக்கும் நல்ல உறவு இருக்கிறது' என்று கூறி என்னை மிரட்டுவார். பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தி வந்தார்.

நான் தூங்கும்போது கூட உல்லாசத்தில் இருக்க சொல்லி வற்புறுத்துவார். கட்டிலில் இருந்து எட்டி மிதித்து கீழே தள்ளுவார். நான் அருகில் உள்ள அறைக்கு ஓடிச் சென்று கதவை பூட்டிக் கொள்வேன். அனைத்தையும் கண்ணீருடன் பொறுத்துக்கொண்டேன். ஆனால் எனது 2 வயது மகள் பசியில் அழுதபோது அவளிடம் மிகுந்த ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டார். அது எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது" என்று கூறியுள்ளார்.

தனது குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கணவர் மீது புகார் அளிக்க முன்வந்ததாக கேட் எலிசபெத் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் குடும்ப நல நீதிமன்றங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்தும் தனது ஆவணப்படத்தில் கேட் எலிசபெத் பேசியுள்ளார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க குடும்ப நல நீதிமன்றங்கள் தவறிவிடுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com