அமெரிக்காவில் முன்கூட்டியே தொடங்கிய வெப்ப அலை... வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அமெரிக்காவில் முன்கூட்டியே தொடங்கிய வெப்ப அலை... வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடும் வெயில் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், போதிய அளவு தண்ணீர் பருகுமாறும் கலிபோர்னியா மாகாண அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதே போல் அரிசோனா மாகாணத்தில் அடுத்த ஓரிரு நாட்களில் வெயில் சுமார் 100 டிகிரியை தாண்டி பதிவாகக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டில் கோடை காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அங்கு அதிக வெப்பநிலை பதிவாக உள்ளது.

‘வெப்பக் குவிமாடம்’ என்று அழைக்கப்படும் வலுவான, மெதுவாக நகரும் உயர் அழுத்த அமைப்பு, வெப்பக் காற்றை தக்க வைப்பதால் கலிபோர்னியா, சியரா நெவாடா மற்றும் அரிசோனாவின் சில பகுதிகளில் வெப்பநிலையை இயல்பை விட 20-30 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com