பிரேசிலில் கனமழை; பல மணிநேரம் கட்டிட மேற்கூரை மேல் தவித்தபடி நின்ற குதிரை

பிரேசிலில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 1.65 லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.
பிரேசிலில் கனமழை; பல மணிநேரம் கட்டிட மேற்கூரை மேல் தவித்தபடி நின்ற குதிரை
Published on

ரியோ டி ஜெனீரோ,

பிரேசில் நாட்டில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்புக்கு இதுவரை 107 பேர் உயிரிழந்து உள்ளனர்.

136 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 1.65 லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். இதற்காக மீட்பு குழுவினர் படகுகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் வழியே தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடும் வெள்ள பாதிப்பில் சிக்கிய குதிரை ஒன்று, வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் கட்டிடம் ஒன்றின் மேற்கூரை மீது பல மணிநேரம் நின்று கொண்டிருந்தது.

போர்ட்டோ அலிகர் பெருநகர பகுதிக்குட்பட்ட கனோவாஸ் நகரில் சரிந்து விழ கூடிய அபாய சூழலில், கட்டிடத்தின் மேற்கூரையில் நிற்க முடியாமல், அந்த குதிரை தவித்தபடி இருந்தது. மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையின் ஒளி சிறிதளவே இருந்த சூழலில், இதுபற்றிய தகவல் அறிந்து மீட்பு குழுவினர் வந்தனர்.

சமூக ஊடகத்தில் கேரமேலோ என பாசத்துடன் பெயரிட்டு நெட்டிசன்களால் அழைக்கப்படும் அந்த குதிரை, மிதவை படகு ஒன்றின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com