ஆப்கானிஸ்தானில் தொடர் கனமழை, வெள்ளம் - 70 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இடைவிடாது கொட்டி தீர்த்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தொடர் கனமழை, வெள்ளம் - 70 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை கோடை காலமாகும். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோடை காலத்தில் அந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவு மழை பெய்வது வாடிக்கையாக உள்ளது. அதன்படி ஆண்டுதோறும் இந்த மழையால் பெரும் வெள்ளம் உருவாகி நூற்றுக்கணக்கானோரின் உயிரை பலி கொல்கிறது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பர்வான், கிழக்கு பகுதியில் உள்ள மைதான் வார்டாக் உள்ளிட்ட பல மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இந்த பேய் மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பர்வான் மாகாணத்தின் மத்திய பகுதி முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த மாகாணத்தில் மட்டும் சுமார் 300 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

மழை வெள்ளத்தால் கிழக்கு மாகாணம் நுரிஸ்தானில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நாசமாயின. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வெள்ளம் ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணங்களான கபீஷா, பஞ்ஷீர் மற்றும் கிழக்கு மாகாணங்கள் பாக்டியா, நங்கார்ஹர் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர்.

மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com