

ஜெருசலேம்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.
இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமைதி பேச்சுவார்த்தையில் விரைவில் உடன்படிக்கை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இந்த மோதலின்போது ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர். இதனால், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், ஹிஸ்புல்லாவின் ஆயுதக்கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் மீது அவ்வப்போது டிரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள தயியா பகுதி மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேலின் வடக்கு மாவட்டத்தில் உள்ள கிர்யட் ஷமொனா நகரை குறிவைத்து இந்த ராக்கெட், டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, லெபனானில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய படைகளை குறிவைத்தும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனிடையே, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.