லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் - ஹிஸ்புல்லா எச்சரிக்கை

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

பெய்ரூட்,

ஈரானின் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல்-காசா போரில் காசாவிற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் லெபனானில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்களை நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல்களால் லெபனானில் சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, 14 மாத இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இதன்படி, இஸ்ரேல் ராணுவம் ஜனவரி மாத இறுதிக்குள் லெபனானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேலின் எல்லையில் உள்ள லிட்டானி நதிக்கரையில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் பின்வாங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பின்னர் இந்த ஒப்பந்தத்திற்கான கால அவகாசம் பிப்ரவரி 18-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், லிட்டானி நதிக்கரையின் தெற்கு பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் வெளியேறினர். ஆனால் தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது கூறியதாவது;-

"போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு நாங்கள் முழுமையாக உடன்பட்டோம். லிட்டானி நதிக்கு தெற்கே எங்களுடைய ஆயுதப் படைகளை நிறுத்தவில்லை. ஆனால் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை. இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது.

இஸ்ரேலிய தாக்குதல்கள் விதிமீறல்கள் அல்ல, அது எல்லா வரம்புகளையும் தாண்டிய ஒரு ஆக்கிரமிப்பு. ஹிஸ்புல்லா அமைப்பு எப்போதும் தயாராக உள்ளது, அதே நேரம் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்டுள்ளது. இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால், நாம் வேறு வழிகள் மூலம் தக்க நடவடிக்கை எடுப்போம்.

எதிரியை எதிர்கொள்ள எங்கள் பலத்தையும், திறன்களையும் பயன்படுத்துவதில் இருந்து யாரும் எங்களை தடுக்க முடியாது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டங்களை எதிர்கொள்வதில் ஹிஸ்புல்லா பலவீனமாக இல்லை. வலிகளையும், உயிரிழப்புகளையும் குறைக்கக்கூடிய தீர்வுகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவே இதுவரை நாம் பொறுமையாக இருக்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com