

வாஷிங்டன்,
இத்தாலியில் மெலோனியின் புகழ் சரிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில், டிரம்ப் உடனான நட்பு தனது புகழுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி காட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரான்சின் ஏவியான் நகரில் ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் மெர்ஸ், பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு முடிந்த நிலையில், டிரம்ப் இத்தாலியைச் சேர்ந்த செய்தி நிறுவன ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், “ஜி7 மாநாட்டில் நான் மெலோனியுடன் பேசியதால் அநேகமாக அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மெலோனி கெஞ்சினார். அதை நான் எடுத்திருக்க மாட்டேன். இருந்தாலும் அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டதால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார்.
இதற்கு பதிலடியாக மெலோனி தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில், “டிரம்ப் கூறியிருப்பது முற்றிலும் பொய். அவரது பேச்சை கேட்டதும் நான் திகைத்துப் போனேன். நானும், இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அப்பட்டமாகப் பொய் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நட்பு நாடுகளின் தலைவர்களிடமே இவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் எனப் புரியவில்லை” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், “ஜி7 மாநாட்டின்போது இத்தாலி பிரதமர் மெலோனி என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார். இத்தாலியில் அவரது புகழ் சரிந்துவிட்டது. ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடாமல் தடுத்து, இத்தாலியை உண்மையாக பாதுகாக்கும், நேசிக்கும் அமெரிக்காவை மெலோனி புறக்கணித்தார்.
இத்தாலியில் உள்ள விமான ஓடுதளங்களை அமெரிக்க விமானப்படை பயன்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. இதனால் எங்கள் தளவாடங்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இத்தாலி மற்றும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் பல நூறு பில்லியன் டாலர்களை செலவு செய்கிறது.
இப்போது ஈரான் ராணுவத்தை அமெரிக்கா தோற்கடித்துவிட்டதால், அமெரிக்காவுடன் மீண்டும் நட்பை வலுப்படுத்தி இத்தாலியில் தனது செல்வாக்கை மீட்டெடுக்க மெலோனி விரும்புகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், டிரம்ப்பின் பதிவிற்கு மெலோனி மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அதிபர் டிரம்ப்பின் பேச்சு அர்த்தமற்றது. எனது புகழுக்கு டிரம்ப்புடனான நட்பு எந்த வகையிலும் உதவவில்லை. எனது புகழ் டிரம்ப்புடனான நட்பை சார்ந்ததும் இல்லை. எனது புகழ் இத்தாலியின் நலன்களை பாதுகாப்பதில் எனக்கு இருக்கும் திறன்களை மட்டுமே சார்ந்துள்ளது. இதையே நான் எப்போதும் செய்து வந்துள்ளேன்.
இத்தாலியில் அமெரிக்க படைத்தளங்களுக்கான அனுமதி தொடர்பான விவகாரத்திலும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்கள் நாட்டின் நலன் சார்ந்துதான் நான் முடிவுகளை எடுத்துள்ளேன். நான் பிரதமராக இருக்கும் வரை எந்த ஒப்பந்தமும் மீறப்படாது. இத்தாலி ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எனது புகழ் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் புகழ் எந்த நிலையில் உள்ளது என்பதை கவனியுங்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். இருநாட்டு தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த வார்த்தை மோதல் சர்வதே அளவில் பேசுபொருளாகியுள்ளது.