போதைபொருள் கடத்தல் வழக்கு: வீட்டை சுற்றிவளைத்த போலீசார் - முன்னாள் அதிபர் அதிரடி கைது

போதைபொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைபொருள் கடத்தல் வழக்கு: வீட்டை சுற்றிவளைத்த போலீசார் - முன்னாள் அதிபர் அதிரடி கைது
Published on

டெகுசிகல்பா:

ஹோண்டுராஸ் மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். 2014 முதல் 2021 வரை ஹோண்டுராஸ் நாட்டின் அதிபராக ஜுவன் ஒர்லெண்டோ ஹெர்னெண்டிஸ் அல்வரடொ செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டுராசில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்தது. ஹோண்டுராஸ் அதிபராக பதவி வகித்தபோது போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும், போதைப்பொருள் கடத்தல், ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாகவும் ஜூவன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஹோண்டுராஸ் முன்னாள் அதிபர் ஜூவன் மீது அமெரிக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், போதைபொருள் கடத்தல் வழக்கில் ஹோண்டுராஸ் முன்னாள் அதிபர் ஜூவனை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால், ஜூவனை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஹோண்டுராஸ் அரசிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. நாடு கடத்தல் விவகாரம் தொடர்பாக ஹோண்டுராஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் ஜூவனை உடனடியாக கைது செய்ய கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் நேற்று தலைநகர் டெகுசிகல்பாவில் உள்ள ஜூவன் வீட்டை அதிரடியாக சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த ஜூவனை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யபப்ட்ட ஜூவன் விரைவில் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஹோண்டுராஸ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com