மீண்டும் வன்முறை களமாக மாறிய ஹாங்காங் - அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள் சூறை

ஹாங்காங் அரசு தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது.
மீண்டும் வன்முறை களமாக மாறிய ஹாங்காங் - அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள் சூறை
Published on

ஹாங்காங்,

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா ரத்து செய்யப்பட்டபோதும், சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. 99-வது நாளாக நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டம் ஹாங்காங்கை மீண்டும் வன்முறை களமாக மாற்றியது.

பெண்கள் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடைகளை அணிந்து கொண்டு 2 கி.மீ. தூரத்துக்கு அமைதி பேரணி சென்றனர். அனுமதிக்கப்பட்ட தூரத்தை தாண்டி மக்கள் பேரணியாக செல்ல முற்பட்டதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் போராட்டக்காரர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறி சென்றதால் இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. சிறிது நேரத்தில் இந்த மோதல் கலவரமாக உருவெடுத்தது. போலீசாரின் அடக்குமுறையால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை சூறையாட தொடங்கினர்.

ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுங்கியதோடு, அரசு அலுவலகங்களுக்குள் பெட்ரோல் குண்டுகளையும் வீசி எறிந்தனர். அத்துடன் சாலையில் போலீசார் போட்டு வைத்திருந்த தடுப்பு வேலிகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

மேலும் சுரங்க ரெயில் நிலையங்களுக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் சூறையாடினர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் ஹாங்காங் முழுவதும் கலவர பூமியாக காட்சியளித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com