ஈரான்: ஹிஜாப் இல்லாமல் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனையின் வீடு தகர்ப்பு.. -கண்கலங்கி நின்ற சோகம்!

ஈரானிய பெண்கள் எங்கு சென்றாலும் கட்டாய ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி ஆடை அணிய வேண்டும்.
ஈரான்: ஹிஜாப் இல்லாமல் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனையின் வீடு தகர்ப்பு.. -கண்கலங்கி நின்ற சோகம்!
Published on

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஈரானிய பெண்கள் எங்கு சென்றாலும் அவர்கள் நாட்டின் கட்டாய ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி ஆடை அணிய வேண்டும்.

ஈரானிய விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் தலைமுடியை மறைத்தவாறு, தலையில் முக்காடு அணிந்து தான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தென் கொரியாவில் சர்வதேச மலை ஏறும் போட்டி சமீபத்தில் நடந்தது. இப்போட்டியில் ஈரானிய மலையேற்ற வீராங்கனை எல்னாஸ் ரெகாபி(33 வயது), ஹிஜாப் இல்லாமல் பங்கேற்றார்.

சர்வதேச போட்டியில் ஈரானின் கட்டாய ஆடைக் கட்டுப்பாட்டை அவர் மீறினார் என்று கூறப்படுகிறது. "எனது முக்காடு "கவனமின்றி" கீழே விழுந்துவிட்டது" என்று அவர் விளக்கம் அளித்தார்.இதனையடுத்து அவர் கட்டாயமாக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் போட்டியிட்ட ஈரானிய தடகள வீராங்கனையின் வீடு போலீஸ் அதிகாரிகளால் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உரிய அனுமதி இல்லாததன் காரணமாக அவருடைய குடும்பவீடு இடிக்கப்பட்டது என்றும், இதற்கும் ஹிஜாப் சம்பவத்திற்கும் சம்பந்தமில்லை, இது பல மாதங்கள் முன்பு நடந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இதனிடையே, வீராங்கனை எல்னாஸ் ரெகாபி மற்றும் அவரது சகோதரரும் சிறந்த தடகள வீரருமான தாவூத் ஆகியோர் கண்கலங்கி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

சர்வதேச மலை ஏறும் போட்டி முடிந்தபின் தனது தாய்நாட்டிற்கு திரும்பிய வீராங்கனை எல்னாஸ் ரெகாபி, தலையில் முக்காடு அணிந்துகொண்டு வரவில்லை. மாறாக, தனது தலைமுடியை ஒரு கருப்புநிற பேஸ்பால் தொப்பியால் மூடியிருந்தார். அப்போது விமான நிலையத்தில் எல்னாஸ் ரெகாபிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com