

ரியாத்,
சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதேவேளை, எண்ணெய் வளம் மிக்கப்பகுதிகளை அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது.
அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று மீண்டும் ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். சவுதி அரேபியாவின் அப்கியூக் நகரில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம், டமாம் நகரில் உள்ள கிங் பகத் சர்வதேச விமான நிலையம், நிஜ்ரன் பகுதியில் உள்ள ராணுவ படைத்தளம் உள்பட சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல்கள் சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டன. அதேவேளை, தலைநகர் ரியாத்தில் ஏவுகணை பாகம் விழுந்து நபர் படுகாயமடைந்ததாகவும், வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, டிரோன் தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.