ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. சவுதியில் முதன்மை கச்சா எண்ணெய் குழாய் மூடல்

கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு ரூ.9 ஆயிரத்து 500-ஐ (100 டாலர்) தாண்டியது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. சவுதியில் முதன்மை கச்சா எண்ணெய் குழாய் மூடல்
Published on

ரியாத்,

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தாக்குதலால் சவுதியின் முதன்மை கச்சா எண்ணெய் வினியோக குழாய் தொடர்பாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

உள்நாட்டுப் போர்

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. குறிப்பாக, ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்குள்ள தங்களுக்கு ஆதரவான அரசாங்கத்தைக் காப்பாற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த 2015 முதல் போரில் குதித்தன.

இந்த மோதலால் இதுவரை சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022 முதல் அங்கு நிலவி வந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம், தற்போது மீண்டும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணைக்கு மாற்று

இந்த நிலையில், செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள, சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கும் உலகக் கச்சா எண்ணெய் வினியோகத்திற்கும் மிக முக்கிய தளமாக விளங்கும் 'மாயுன்' தீவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிரடித் தாக்குதல் நடத்தித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபியாவின் மிக முக்கிய 'கிழக்கு-மேற்கு' கச்சா எண்ணெய் குழாய்த்தொடர் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. 1980-களில் கட்டப்பட்ட இந்த கிழக்கு-மேற்கு குழாய்த்தொடர், ஹார்முஸ் நீரிணைக்கு மாற்றாக சவுதியின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

தீவிர விசாரணை

இதனைத் தொடர்ந்து, சவுதி எரிசக்தி அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த முதன்மை எண்ணெய் வினியோகப் பாதையைத் தற்காலிகமாக முழுமையாக மூடியுள்ளது. இந்தத் தாக்குதல் பக்கத்து நாடான ஈராக் கின்மைசான் மாகாணத்தில் இருந்து ஏவப்பட்டதாகச் சவுதி குற்றம் சாட்டியதை அடுத்து, ஈராக் பிரதமர் அலி அல்-சைதி அங்கிருந்த ராணுவ கமாண்டரை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை

இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு ரூ.9 ஆயிரத்து 500-ஐ (100 டாலர்) தாண்டியது. மற்றொரு புறம், கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உடைமைகளை விட்டு அகதிகளாகத் தப்பியோடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com