

ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான துறைமுக நகரமான மோகாவிற்குள், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நுழைந்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நகரத்திற்குள் நுழைந்து முக்கிய சந்திப்புகளில் நிலை கொண்டுள்ளனர்.இதனால் மோகாவிற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஏமனின் மேற்கு மாகாணமான தைஸில் ஹவுதிகள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
தைஸ் நகரத்தையும் மேற்கு கடற்கரையையும் இணைக்கும் முக்கிய வினியோக பாதையான அல்-ஷாகிரா பகுதியை அவர்கள் கைப்பற்றியுள் ளதாக ஏமன் அரசு ஆதரவு படைகள் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடி யாக ஏமன் அரசு படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.இந்த நகரம் கைப்பற்றப்பட்டால், செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் மிக முக்கியமான நீர்வழியான பாப்-எல்-மண்டேப் பகுதியில் கப்பல் போக்குவரத்தை குறிவைக்க ஹவுதிகளுக்கு வாய்ப்பு ஏற்படும். மோகா நகரம் இந்த நீர்வழியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் அங்கிருந்து சவுதி அரேபியாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குவதற்கு திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கசிந்தது.
இதற்கு பாகிஸ்தான் ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்பட யாரேனும் தாக்குதல் நடத்தினால் மெக்கா ஒப்பந்தம் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவம் அவர்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில், காசாவின் பெய் லஹியா பகுதியில் இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 8 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஈரான் தாக்குதல் நடத்தினால், அதன் எரிசக்தி நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.