சூடானில் உயிரியல் ஆய்வகத்தை கைப்பற்றிய துணை ராணுவப்படை - பேராபத்து ஏற்படலாம் என ஐ.நா. எச்சரிக்கை

சூடானில் உயிரியல் ஆய்வகத்தை துணை ராணுவப்படை கைப்பற்றியுள்ளதால் பேராபத்து ஏற்படலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெனிவா,

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த நாடும் வன்முறை களமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு தலைநகர் கார்டூமில் உள்ள தேசிய உயிரியல் ஆய்வகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய சூடானுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா சயீத், "கார்டூமில் உள்ள உயிரியல் ஆய்வகத்தை சண்டையிடும் ஒரு தரப்பு ஆக்கிரமித்ததில் மிகப்பெரிய உயிரியல் ஆபத்து உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் ஆய்வகத்தில் போலியோ மாதிரிகள் உள்ளன.

ஆய்வகத்தில் தட்டம்மை மாதிரிகள் உள்ளன. ஆய்வகத்தில் காலரா மாதிரிகள் உள்ளன. கார்ட்டூமில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை வெளியேற்றுவது மற்றும் மின்வெட்டு ஆகியவை தொடர்ந்தால் மருத்துவ நோக்கங்களுக்காக ஆய்வகத்தில் சேமிக்கப்பட்டுள்ள உயிரியல் பொருட்களை சரியாக நிர்வகிக்க முடியாது. இதனால் நுண்ணுயிரிகள் கசிவு ஏற்பட்டு தொற்று பரவும் அபாயம் உள்ளது" என்றார்.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பில் எது உயிரியல் ஆய்வகத்தை கைப்பற்றியுள்ளது என்பதை ஐ.நா. தெளிவுப்படுத்தவில்லை. அதே சமயம் துணை ராணுவப்படை தான் ஆய்வகத்தை கைப்பற்றி உள்ளதாக சூடானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com