மனிதர்களின் இரைச்சல் பெருங்கடலின் இயற்கை சூழலை மாற்றியமைக்கிறது; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மனிதர்களின் இரைச்சல் பெருங்கடலின் இயற்கை சூழலை மாற்றியமைக்கிறது என அதிர்ச்சி கலந்த தகவலை ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
மனிதர்களின் இரைச்சல் பெருங்கடலின் இயற்கை சூழலை மாற்றியமைக்கிறது; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Published on

உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை பற்றி சர்வதேச சமூகம் கவலைப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால்,

மனிதர்கள் ஏற்படுத்தும் இரைச்சல் பெருங்கடலின் இயற்கை சூழலையே மாற்றியமைக்கிறது. பல ஆச்சரியங்களை கொண்டுள்ள கடலில் வாழ கூடிய பாலூட்டிகள், மீன்கள் உள்ளிட்ட 80 சதவீத உயிரினங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

ஒலி அலைகள் நீரில் வேகமாக பயணிக்கின்றன. கடலில் வாழும் உயிரினங்கள் ஒலியை பயன்படுத்தி, தொடர்பு கொள்ளுதல், இடம்பெயர்தல், வேட்டையாடுதல், மறைந்து கொள்ளுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றன.

ஆனால் தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னர், தொழிற்சாலைகள் பெருகின. நீருக்குள் பல விசயங்களை மனிதன் அறிமுகப்படுத்தியுள்ளான். கப்பல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான தேடுதலுக்காக நில நடுக்கம் சார்ந்த அளவீடுகள், சமுத்திர பகுதியில் சோனார் மேப்பிங், கடலோர கட்டுமான பணிகள் மற்றும் காற்றாலைகள் ஆகியவை உருவாக்கப்பட்டன.

எனினும், பெருங்கடலின் நலம் பற்றிய சர்வதேச அளவிலான ஆய்வுகளில் இரைச்சல் தொடர்ந்து கண்டுகொள்ளப்படவே இல்லை.

இதுபற்றி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலில் இருந்து முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சிறிய வகை இறால்களில் இருந்து பெரிய சுறாக்கள் வரை கடல்வாழ் உயிரினங்கள் மனிதர்களின் இரைச்சலால் பெருமளவில் பாதிக்கப்பட்டு பெருங்கடலின் இயற்கை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவின்படி, 90 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அவற்றில் மீன்கள் மற்றும் ஜெல்லி மீன்கள் போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்களில் 80 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது.

எனினும், கடல்வாழ் பறவையினங்கள் மற்றும் கடல் ஆமைகள் ஆகியவற்றில் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.

பெரிய மீன்களுக்கு இரையாகாமல் தப்பிக்க மீன்குஞ்சுகள் கற்று கொள்வது அவசியம். ஆனால், மீன்குஞ்சுகளின் பயணித்தல், இடம் பெயர்தல், தொலைதொடர்பு அணுகுமுறை மற்றும் இரையாகாமல் தப்பிக்கும் திறனை கற்று கொள்ளுதல் ஆகியவற்றிற்கு கப்பல்கள் பெரும் இடையூறாக உள்ளன.

ஒலி மாசு, பல கடல்வாழ் உயிரினங்களின் இயற்கை வாழ்விடங்களில் இருந்து அவற்றை வெளியேற்றி உள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமலான பின்பு, கப்பல்களின் இரைச்சலால் ஏற்பட்ட ஒலி மாசு 20 சதவீதம் குறைந்தது. அதன்பின், அதிகம் சப்தம் எழும், பரபரப்பு நிறைந்த நீர்வழி பகுதிகளில், அழிந்து வரும் நிலையில் உள்ள டால்பின்கள் மற்றும் சுறாக்கள் போன்றவை தென்பட தொடங்கின.

கடல்வாழ் உயிரினங்கள் அழுத்தங்களில் இருந்து விடுபட்டதற்கான உறுதியான சான்றாக இவை அமைந்துள்ளன என கூறும் ஆய்வாளர் டுவார்ட், கப்பல்களின் வேகங்களை குறைப்பது, படகுகளில் இரைச்சல் குறைந்த புரொப்பல்லர்களை இணைப்பது மற்றும் மிதவை காற்றாலைகளை பயன்படுத்துவது போன்ற மாற்று வழிகளை கையாளும்படி சுட்டி காட்டியுள்ளார்.

10ல் ஒரு பங்கு இரைச்சலற்ற படகுகள் கூட பரந்த அளவிலான பலன்களை தரும் என கூறுகிறார். ஒலி மாசு, கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவை சர்வதேச எல்லைகளை கடந்தவை. எனவே, பெருங்கடலில் இருந்து நிலையான வருவாயை மீண்டும் ஈட்டுவதற்கு சர்வதேச அளவிலான ஒப்பந்தங்களை உருவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com