மனித உரிமை மீறல்: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் சிறையில் அடைப்பு


மனித உரிமை மீறல்: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர்  சிறையில் அடைப்பு
x

சர்வதேச நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று இண்டர்போல் அதிகாரிகளால் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டார்.

மணிலா,

தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் தற்போது அதிபராக பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் என்பவர் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அப்போது அதிபராக இருந்த ரோட்ரிகோ டுடெர்டே வீழ்த்தி, மார்கோஸ் அதிபரானார். முன்னாள் அதிபரான ரோட்ரிகோ டுடெர்டே மணிலாவின் முன்னாள் மேயராக இருந்த போது, சட்டவிரோத போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுத்தார். டுடெர்டே, அதற்காக மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது, போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததாக டுடெர்டே மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஐநா சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதையடுத்து அவருக்கு வாரண்ட் பிறப்பித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம், ரோட்ரிகோ டுடெர்டே, நெதர்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இண்டர்போல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட டுடெர்டே, நெதர்லாந்து சிறையில் அடைக்கப்பட்டார். மனித உரிமை மீறல் வழக்கில் , டுடெர்டே மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, டுடெர்டே ஆதரவாளர்கள், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story