மெக்சிகோவை தாக்கிய எரிக் சூறாவளி; 2 பேர் பலி

கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணங்களில் ஒன்றான ஓக்சாகாவில் சக்தி வாய்ந்த எரிக் என்ற புயல் கடந்த வியாழக்கிழமை கரையை கடந்தது. இதனை மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம் உறுதி செய்துள்ளது. அப்போது, அது பல பகுதிகளையும் கடுமையாக தாக்கியது.
மெக்சிகோ நாட்டின் பசிபிக் கடலோர பகுதியில் சுற்றுலா நகரங்களான அகாபுல்கோ மற்றும் போர்ட்டோ எஸ்காண்டிடோ ஆகியவற்றுக்கு இடையே பெரும் பாதிப்பை இந்த புயல் ஏற்படுத்தி சென்றது. அது கரையை கடந்து சென்றபோது பலத்த காற்றும் வீசியது.
புயலால் கனமழை பெய்தது. இதனால், வெள்ள நீர் பல்வேறு பகுதிகளையும் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், பல்வேறு இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் காற்றின் வேகத்தில் பலத்த சேதமடைந்தன. வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
அவற்றை சரி செய்யும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இந்த புயலால், 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனையடுத்து, வேறு யாரும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளும், நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






