ஜப்பானை அச்சுறுத்தும் ‘ஹைசென்’ புயல் - 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவு

ஜப்பானை ‘ஹைசென்’ என்ற சக்தி வாய்ந்த புயல் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜப்பானை அச்சுறுத்தும் ‘ஹைசென்’ புயல் - 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவு
Published on

டோக்கியோ,

ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள தீவுகளை, கடந்த வாரம் மேசக் என்ற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் வீசிய புயலில், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார கம்பங்கள் முறிந்து விழுந்ததில், மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், இருளில் மூழ்கின.

மேலும் இந்த புயல் காரணமாக அமாமி ஓஷிமா தீவுப்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்தது. நியூசிலாந்தில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த இந்த சரக்கு கப்பலில் 43 மாலுமிகளும் சுமார் 6 ஆயிரம் பசுக்களும் இருந்ததாக தெரிகிறது.

3 மாலுமிகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 40 பேரின் கதி என்ன? என்பது இன்னமும் தெரியவில்லை. இதனிடையே கியூஷு தீவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மேசக் புயல், திசை மாறி சென்று தென் கொரியாவை தாக்கியது.

இந்த நிலையில் மேசக் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஜப்பான் இன்னும் மீண்டு வராத நிலையில் அங்கு ஹைசென் என்கிற சக்தி வாய்ந்த புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தப் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புயலின் போது ஒகினாவா, ககோஷிமா, நாகசாகி மற்றும் குமாமோடோ ஆகிய மாகாணங்களின் பேய் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் மிகவும் சீற்றமாக காணப்படும் என்றும், தாழ்வான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள், சமூக கூடங்கள் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்லும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் நெரிசலான பொது முகாம்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க பெரும்பாலான மக்கள் புயல் அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் இருக்கும் ஓட்டல்களில் தங்க முடிவு எடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஹைசென் புயல் ஜப்பானின் தென்மேற்கு மாகாணங்களில் தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு வழிவகுத்துள்ளது.

மேலும் இந்த புயல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ரெயில் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமாமி ஓஷிமா தீவில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததில் மாயமான மாலுமிகளை தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜப்பான் கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஹைசென் புயல் தென் கொரியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அந்தப் புயல் இன்று (திங்கட்கிழமை) தென்கொரியாவை தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com