

நகரி,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நியூ சிவபுரி காலனியைச் சேர்ந்த தேவேந்திர ரெட்டி-சுனிதா தம்பதியின் மகள் ஸ்ரீவீணா (வயது 28). இவருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீவீணா கடந்த 2 நாட்களுக்கு முன் புளோரிடா சென்றார். அங்குள்ள ஒரு நீச்சல் குளத்தில் ஸ்ரீவீணா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.
தனது மகளுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தகவல் அறிந்த எல்.பி.நகர் எம்.எல்.ஏ., உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஸ்ரீவீணாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.