புதினுடனான நட்பால் உக்ரைன் போர் எளிதில் முடிவுக்கு வரும் என நினைத்தேன்; ஆனால்... டிரம்ப் வேதனை


புதினுடனான நட்பால் உக்ரைன் போர் எளிதில் முடிவுக்கு வரும் என நினைத்தேன்; ஆனால்... டிரம்ப் வேதனை
x

உலக நாடுகளின் போர்களை நிறுத்த பிரான்ஸ் ஜனாதிபதி உதவினார் என டிரம்ப் முதன்முறையாக பேசியுள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைப்பின் தலைமையகத்தில் 80-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடந்து வரும் மோதல் பல தலைமுறைகளாக தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. இறையாண்மை கொண்ட இரு சுதந்திர, ஜனநாயக நாடுகள் என்ற அடிப்படையில் இரு நாடுகள் என்பதே தீர்வாக இருக்கும்.

பாலஸ்தீன நாடு என்பது ஒரு வகை உரிமை. அது பரிசு அல்ல. 2 நாடுகள் இன்றி, மத்திய கிழக்கில் அமைதி என்பது ஏற்படாது என்று கூறினார். இதன்பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஐ.நா. அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தின் பொது விவாதத்தில் பங்கேற்று பேசினார். ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை அவர் பேசினார்.

அதில், ரஷியா போருக்கு, அந்நாட்டிடம் இருந்து சீனா மற்றும் இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருவதே காரணம் என நேரடியாக குற்றச்சாட்டாக கூறினார். உக்ரைன் மோதலுக்கு அவர்களே நிதி வழங்கி போரை ஊக்குவிக்கின்றனர் என்றும் கூறினார்.

இதன்பின்னர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை கூட்டத்தின் ஒரு பகுதியாக சந்தித்து பேசினார். இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், டிரம்பும் மேக்ரானும் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார் என தெரிவித்தது.

அப்போது டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, 2 போர்களை நிறுத்துவதற்கு உண்மையில் மேக்ரான் எனக்கு உதவினார். நாங்கள் 7 போர்களை நிறுத்தி உள்ளோம். ஆனாலும் உக்ரைன் மற்றும் ரஷியா சூழ்நிலையே பெரிய அதிருப்தியான ஒன்றாக உள்ளது. ஆனால் இறுதியில், அதுவும் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன். புதினுடனான நட்புறவால் அது எளிதில் நடைபெறும் என நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்ட வகையில், அந்த உறவில் எந்த அர்த்தமும் இல்லை என்று வேதனையுடன் கூறினார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிரம்ப் கூறும்போது, நாங்கள் நிறைய போர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால், இரு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் தீவிர கவனத்தில் கொள்ள கூடியது என்றார்.

இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, தாய்லாந்து மற்றும் கம்போடியா, அர்மீனியா மற்றும் அஜர்பைஜான், கொசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் காங்கோ ஆகிய நாடுகள் இடையேயான போர்களையும் நிறுத்தியிருக்கிறோம்.

வர்த்தக காரணங்களுக்காக, இவற்றில் 60 சதவீதம் பேர் போரை நிறுத்தினர். இதனை நாங்கள் செய்தோம் என்று பெருமையுடன் கூறினார். அதனால், ஒரு போரை நிறுத்தியதற்கு ஒரு நோபல் பரிசு என்றால், எனக்கு இதுவரை அமைதிக்கான 7 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

ரஷியா-உக்ரைன் போரை நிறுத்தினால், உங்களுக்கு நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என என்னிடம் கூறப்பட்டது. ஆனால், அது பெரிய போராக உள்ளது என்றும் டிரம்ப் கூறினார். இந்நிலையில், முதன்முறையாக போர்களை நிறுத்த பிரான்ஸ் ஜனாதிபதி உதவினார் என முதன்முறையாக பேசியுள்ளார்.

1 More update

Next Story