

ஹாங்காங்,
கேரி லாம் தனது ராஜினாமா குறித்து பேசியதாக கூறி ஆடியோ பதிவு ஒன்று அண்மையில் வெளியானது. இதில் ஹாங்காங்கில் நீடிக்கும் பதற்றமான சூழலுக்கு நானே காரணம். இந்த பிரச்சினைக்கு தீர்வாக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு, பதவி விலக விரும்புகிறேன் என கேரி லாம் பேசி இருந்தார்.
இந்த ஆடியோ பதிவு ஹாங்காங்கில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கேரி லாம் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் ராஜினாமா செய்வது குறித்து சீன அரசுடன் இதுவரை பேசவில்லை. சொல்லப்போனால் அது குறித்து நான் யோசனை கூட செய்ததில்லை. ராஜினாமா செய்வது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஹாங்காங்குக்கு உதவுவதற்காக நானும், எனது குழுவும் பதவியில் இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஹாங்காங்கை மீட்டு வழி நடத்த முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் ஹாங்காங்கை பழைய நிலைக்குக் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.