இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது: டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு நேரடி ராணுவ பேச்சுவார்த்தைகளே காரணம் என தொடர்ந்து இந்தியா உறுதியாக கூறி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது: டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு
Published on

வாஷிங்டன் டி.சி.,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தானில் இருந்து செயல்படும், இந்தியாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.

9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது. ஆனால், அமெரிக்க அரசின் முயற்சியாலேயே போர் நிறுத்தம் வந்தது என்ற வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அப்போது பேசியது சர்ச்சையானது.

ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு நேரடி ராணுவ பேச்சுவார்த்தைகளே காரணம் என்றும், பாகிஸ்தானுக்கு எதிரான போர்நிறுத்த முடிவை எடுத்ததற்கு அமெரிக்காவின் தலையீடோ அல்லது 3-ம் நாட்டின் தலையீடோ கிடையாது என்றும் தொடர்ந்து இந்தியா உறுதியாக கூறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் தடுத்து நிறுத்தப்பட்டதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

செர்பியா, கொசோவோ இடையேயான போரை தடுத்து நிறுத்தியதற்காக, எகிப்து மற்றும் எத்தியோப்பியா இடையேயான போரை தடுத்து நிறுத்தியதற்காக, மத்திய கிழக்கு பகுதியில் ஆபிரகாம் ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என பதிவிட்டு இருக்கிறார்.

ரஷியா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஈரான் உள்பட நாடுகளுக்கு இடையேயான விவகாரங்களில் நான் என்ன விசயங்களை மேற்கொண்டாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.

காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் ருவாண்டா நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடந்தது. இதுபற்றி அவர் குறிப்பிட்டு பேசும்போது, ஆப்பிரிக்காவுக்கு இது ஒரு சிறந்த நாள். முற்றிலும் வெளிப்படையாக கூறுவதென்றால், உலகிற்கே இது ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு நோபல் பரிசு எல்லாம் கிடைக்காது என்று கூறினார்.

இதனை தொடர்ந்தே மற்ற நாடுகளை குறிப்பிட்டு அவர் பேசினார். ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு நேரடி ராணுவ பேச்சுவார்த்தைகளே காரணம் என தொடர்ந்து இந்தியா உறுதியாக கூறி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com