

வாஷிங்டன் டி.சி.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதனை ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து, ஈரான் நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் பாகிஸ்தானுக்கு தனி விமானத்தில் வந்துள்ளனர். அமெரிக்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வரவுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால், ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்காக சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன என எச்சரித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாங்கள் இதுவரை தயாரிக்கப்படாத சிறந்த வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் ஏற்றி கொண்டு கப்பலில் தயாராக இருக்கிறோம். இதற்கு முன் நடந்த தாக்குதலை விட தீவிர தாக்குதலாக அது இருக்கும். அவற்றை வெடிக்க செய்வோம் என்றார்.
இதேபோன்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், தன்னுடைய குழுவினருடன் பாகிஸ்தானுக்கு புறப்படுவதற்கு முன்பு நிருபர்களிடம் கூறும்போது, இந்த அமைதி பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். அது நேர்மறையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதி கூறியது போன்று, நல்ல நம்பிக்கையுடன் ஈரானியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், உதவி கரம் நீட்ட நிச்சயம் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
ஆனால், அவர்கள் எங்களிடம் விளையாட முயன்றால், அதற்கு பதிலடி இருக்கும் என்றும் கூறினார். அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த குழுவில் பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான குழுவினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் வந்துள்ளனர்.
இதேபோன்று, ஈரானின் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரானின் மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி ஆகியோருடன், ஈரான் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களும் வருகை தந்துள்ளனர்.