அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்காவிட்டால்...? - ஜோ பைடன் எச்சரிக்கை

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்காவிட்டால்...? - ஜோ பைடன் எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வரும் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இது பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டெலிவிஷனில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்க தேர்தல் முடிவுகளை எந்த வேட்பாளராவது ஏற்க மறுத்தால், அது நாட்டை குழப்பத்துக்கான பாதையில் தள்ளிவிடக்கூடும். இது இதுவரை நடக்காதது. இது சட்டவிரோதமானது. இது அமெரிக்காவுக்கும் எதிரானது.

தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் சதி மற்றும் தீமையின் பொய்களை பரப்பி வருகிறார்கள். 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றது என்று டிரம்ப் சொல்கிற பெரிய பொய்தான், 82 வயதான சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி மீதான தாக்குதலுக்கும், நாடாளுமன்ற தாக்குதலுக்கும் காரணம் ஆகும். கடந்த 2 ஆண்டுகளில் அரசியல்வன்முறை மற்றும் வாக்காளர்கள்மீதான அச்சுறுத்தலுக்கும் இந்தப் பொய்தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார். ஆனால் இதை எதிர்க்கட்சியான குடியரசு கட்சி நிராகரித்துள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கெவின் மெக்கார்த்தி கூறுகையில், "ஜனாதிபதி பைடன் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஏனென்றால் அவர் தனது விலைவாசி உயர்வுகளுக்கு வழிவகுத்த தனது கொள்கைகள் பற்றி அவரால் பேச முடியாது" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com