சட்ட விரோத குடியேற்றம்: அமெரிக்காவில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்களை தாயகம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்காக வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்தால் குடியேற்ற துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்றனர்.
அதன்படி ஈரானைச் சேர்ந்த 120 பேர் உரிய ஆவணங்கள் இன்றி அங்கு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குடியேற்ற துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு கைதான ஈரானியர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. இதனையடுத்து அவர்களை தாயகம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே அவர்கள் அனைவரும் விரைவில் விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.






