‘ஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன்’ - பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு

ஓரின சேர்க்கையாளராக இருந்து தான் குணமடைந்ததாக பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை கருத்தினை தெரிவித்தார்.
‘ஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன்’ - பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு
Published on

மணிலா,

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் பொது நிகழ்ச்சிகளில் பேசுகிறபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், இதனால் பல தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளாவதும் வாடிக்கையாகி விட்டது. அந்தவகையில், தற்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டி உள்ளார். அண்மையில் ஜப்பானுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த ரோட்ரிகோ துதர்தே, அங்கு வாழும் பிலிப்பைன்ஸ் மக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், பிலிப்பைன்சின் முக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அண்டோனியோ டிரில்லேன்ஸ் என்பவரை அவமதிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசியதாவது:-

நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். அண்டோனியோ டிரில்லேன்ஸ் குறித்து என்ன நினைக்கிறீர்கள். அவர் ஒரு ஓரின சேர்க்கையாளர். சொல்லப்போனால் நானும் ஓரின சேர்க்கையாளராக இருந்து இருக்கிறேன். ஆனால் இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நான் என்னை குணப்படுத்திக்கொண்டேன். நான் ஓரின சேர்க்கையாளராக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

ரோட்ரிகோ துதர்தே தனது அரசியல் எதிரியை விமர்சிப்பதற்காக இப்படி பேசினாலும், ஓரின சேர்க்கையாளராக இருப்பது ஒரு நோய் என பொருள்படும் வகையில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரோட்ரிகோ துதர்தேவின் அந்த பேச்சு தங்களை காயப்படுத்தியதோடு கோபம் அடையவும் செய்திருப்பதாக கூறி ஓரின சேர்க்கையாளர்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com