

பாரிஸ்,
சாதாரண மனிதர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விசித்திரமான உணவுப் பழக்கத்தால் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர் பிரான்சைச் சேர்ந்த மைக்கேல் லோடிடோ.
பிரான்ஸ் நாட்டின் கிரெனோபில் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல் லோடிடோ. இவர் தனது 16-வது வயது முதலே பொது மேடைகளில் உலோகம், கண்ணாடி மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை உண்ணும் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இதன் உச்சகட்டமாக, கடந்த 1978-ம் ஆண்டு ஒரு முழு செஸ்னா 150 (Cessna 150) விமானத்தைச் சாப்பிடும் முயற்சியைத் தொடங்கிய அவர், 1980-ம் ஆண்டிற்குள் அந்த விமானத்தை முழுவதுமாகத் தின்று முடித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
விமானத்தை ஒரே நேரத்தில் விழுங்காமல், அதன் பாகங்களை ஆயிரக்கணக்கான சிறிய துண்டுகளாக வெட்டி சிறிது சிறிதாக சாப்பிட்டார். கூர்மையான உலோகத் துண்டுகள் தொண்டை மற்றும் உணவுக் குழாயில் காயம் ஏற்படுத்தாமல் இருக்க, மினரல் ஆயில் மற்றும் அதிகப்படியான தண்ணீரைக் குடித்துக்கொண்டே அவற்றை விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சாகச நிகழ்ச்சிகளின் போது நாளொன்றுக்குச் சுமார் 1 கிலோகிராம் வரை உலோகப் பொருட்களை அவர் உட்கொண்டது குறிப்பிடத்தக்கது.
'எதையும் சாப்பிடுபவர்' என்று அழைக்கப்பட்ட இவருக்கு, உணவு அல்லாத பொருட்களை உண்ணும் 'பிக்கா' எனப்படும் அரிய நிலை இருந்தது. இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவரது வயிற்றின் உட்சுவர் சாதாரண மனிதர்களை விட 2 மடங்கு தடிமனாக இருந்ததையும், வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலங்கள் மிகவும் வீரியம் மிக்கவையாக இருந்ததையும் கண்டறிந்தனர். ஆச்சரியப்படும் விதமாக, இரும்பு மற்றும் கண்ணாடியை எளிதில் செரித்த இவருக்கு, வாழைப்பழம் மற்றும் வேகவைத்த முட்டை போன்ற மென்மையான உணவுகள் செரிமானக் கோளாறை ஏற்படுத்தின.
விமானம் மட்டுமின்றி, தனது வாழ்நாளில் 18 மிதிவண்டிகள், 15 ஷாப்பிங் கார்ட்டுகள், 7 தொலைக்காட்சிப் பெட்டிகள், 6 சரவிளக்குகள், ஒரு கணினி மற்றும் ஒரு சவப்பெட்டி என மொத்தம் சுமார் 9 டன் உலோகத்தை மைக்கேல் லோடிடோ சாப்பிட்டுள்ளார். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இவரது இந்த விசித்திரச் சாதனை பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகள் உலகையே வியக்க வைத்த இவர், கடந்த 2007-ம் ஆண்டு தனது 57-வது வயதில் இயற்கையான காரணங்களால் காலமானார்.