கொரோனாவை கட்டுப்படுத்த நாடுதழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்துங்கள் - இந்தியாவுக்கு வெள்ளை மாளிகை அதிகாரி யோசனை

கொரோனாவை கட்டுப்படுத்த நாடுதழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு வெள்ளை மாளிகை தலைமை மருத்துவ ஆலோசகர் யோசனை தெரிவித்துள்ளார். ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக ஆஸ்பத்திரிகளை அமைக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த நாடுதழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்துங்கள் - இந்தியாவுக்கு வெள்ளை மாளிகை அதிகாரி யோசனை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரும், உலகின் முன்னணி தொற்றுநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் அந்தோணி பவுசி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளா. அதில் அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா சூழ்நிலை மிகவும் தீவிரமாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும்போது, ஆஸ்பத்திரி படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை நிலவும்போது நிலைமை மோசமாகத்தான் இருக்கும். அதனால்தான், உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற அளவுக்கு இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று கருதுகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா உடனடியாகவும், நீண்டகால அடிப்படையிலும் சில காரியங்களை செய்ய வேண்டும். முதலில், தங்களால் முடிந்த அளவுக்கு அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

உடனடி தீர்வு கிடைக்க வேண்டுமானால், இந்தியா ஏற்கனவே செய்த ஒரு நடவடிக்கை இருக்கிறது. இப்போதும் இந்தியாவின் சில பகுதிகளில் அமலில் இருக்கிறது. அதுதான் முழு ஊரடங்கு. முழு ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

6 மாதங்களுக்கு அமல்படுத்த வேண்டியது இல்லை. சில வாரங்களுக்காவது அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு சீனா கொரோனாவால் உருக்குலைந்தபோது, தனது ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக ஆஸ்பத்திரிகளை கட்டியது. அதுபோல், இந்தியாவும் தனது ராணுவத்தை வைத்து போர்க்கால அடிப்படையில் தற்காலிக ஆஸ்பத்திரிகளை கட்ட வேண்டும். அதன்மூலம் படுக்கை தட்டுப்பாடு நீங்கும்.

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள் போன்றவற்றை வழங்கி வருகிறது. அதுபோல், மற்ற நாடுகளும் இந்தியாவுக்கு உதவ வேண்டும். மருத்துவ பணியாளர்களையும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com