

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ந்தேதி நடந்து முடிந்த பிரதமர் தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. அதன்பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 18ந்தேதி 22வது பிரதமரானார் கான். அவருக்கு பின்புலத்தில் அந்நாட்டு ராணுவம் செயல்பட்டது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், கான் பிரதமரான பின் ராணுவ தலைமையகத்திற்கு இன்று முதன்முறையாக சென்றார். அவருடன் ராணுவ மந்திரி பர்வேஸ் கட்டாக், வெளிவிவகார துறை மந்திரி மெஹ்மூத் குரேஷி, நிதி மந்திரி ஆசாத் உமர் மற்றும் பலர் சென்றனர்.
ராணுவ தலைமையகத்தில் கானை ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா வரவேற்றார். அதன்பின்னர் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பிற தொழில்முறை விவகாரங்கள் பற்றி பிரதமருக்கு விளக்கி கூறப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை பிரதமர் கானை முறைப்படி முதல்முறையாக சந்தித்து பேசினார் பஜ்வா. பிரதமராக தேர்வான கானுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட பஜ்வா, இந்த சந்திப்பில் நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை பற்றி ஆலோசனை மேற்கொண்டார். நாட்டில் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திர தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான முயற்சிகள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.