

இஸ்லாமாபாத்
பாகிஸ்தானில் முக்கிய எதிர்க்கட்சியாக திகழ்கிறது இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப். இவர் தற்போது மூன்றாவது மனைவியை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன, கடந்த பிப்ரவரி மாதம் புஷ்ரா மனேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட மனேகா, திருமணமாகி வீட்டுக்கு வந்ததும் ஏராளமான வளர்ப்பு நாய்களை கண்டு எரிச்சல் அடைந்துள்ளார்.
மனைவிக்காக இவை அனைத்தையும் வேறொரு இடத்தில் வைத்து இம்ரான் கான் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு முன்னர் இம்ரான் கான், மனேகாவுக்கு சில நிபந்தனைகளை விதித்ததாக தெரிகிறது. இதன்படி மனேகாவின் உறவினர்கள் யாரும் அதிக நாட்கள் தங்க கூடாது என்பதாம். ஆனால் அவரது முதல் கணவரின் மூலம் பிறந்த மகன் மனேகாவுடனேயே இருந்ததால் இருவருக்கும் பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் மனேகா, இம்ரான் கானை விட்டு பிரிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆதாரமாக மீண்டும் இம்ரான் கானின் வீட்டில் நாய்கள் உலாவுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால் இந்த தகவலை இம்ரான்கானின் கட்சி செய்தி தொடர்பாளர் மறுத்து உள்ளார். இதைத் தொடர்ந்து இந்த வதந்தி பரவ காரணமாக இருந்த ரோசனமா உம்மத் என்ற உருது பத்திரிகைக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுபப்பட்டு உள்ளது. பகிரங்க மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது . இது தொடர்பாக மேலும் சில ஆன்லைன் ஊடகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.