

முசாபராபாத்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதில் அங்கு எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள அஜீரா என்ற கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் ஒரு வீடு தரை மட்டமானது.
அதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் குழந்தைகள். இது குறித்து தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 7 பேரின் உடல்களையும் அவர்கள் மீட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் நிலச்சரிவால் வீடு தரை மட்டமாகி உயிரிழந்தது அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.