

மைதான்சாஹர்,
உள்நாட்டுப்போர் நடந்து வருகிற ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் அட்டூழியம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு மைதான் வார்தாக் மாகாணத்தில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு போலீசார் பயணம் செய்த பஸ் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் ஓட்டிச்சென்று மோதி வெடிக்க வைத்தார். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததில், அந்தப் பகுதியே குலுங்கியது.
இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் படையினரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 37 பேர் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலியான 7 பேரில் ஒருவர் போலீஸ்காரர், படுகாயம் அடைந்த 37 பேரில் 7 பேர் போலீஸ்காரர்கள் என தகவல்கள் கூறுகின்றன. கார் குண்டு தாக்குதலை நேரில் பார்த்த நசீர் அகமது என்பவர் கூறும்போது, இந்த கார் குண்டுவெடிப்பு பயங்கரமான ஒன்றாக இருந்தது. குண்டுவெடிப்பால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் தூள் தூளாகின என்றார்.
காபூல்-காந்தஹார் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் திறந்து விடப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.