சீனாவில் பாலியல் பலாத்காரத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் பெயரை சொல்லி, பாலியல் பலாத்காரத்தில் இருந்து பெண் ஒருவர் தப்பிய வினோத சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் பாலியல் பலாத்காரத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய கொரோனா
Published on

பிஜீங்,

சீனாவின் உகான் நகருக்கு அருகே உள்ள ஜிங்ஷான் பகுதியைச் சேர்ந்த யி என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்துள்ளார். அந்த வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையன் ஒருவன், யியை கத்திமுனையில் மிரட்டி அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளான். திருடும் நோக்கத்துடன் வீட்டுக்குள் புகுந்த அவன், யி தனியாக இருப்பதை அறிந்ததும், பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டான். அவனிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ போராடியும், முடியாமல் தவித்த அந்த பெண்ணுக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.

அவனை தள்ளிவிட்ட யி தொடர்ந்து கடுமையாக இருமினார். இதனால் அவரை பார்த்து திகைத்து நின்ற கொள்ளையனிடம் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அதனாலேயே வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பொய் சொன்னார். இதனால் பதறிய கொள்ளையன் உயிர் பிழைத்தால் போதும் என்று கிடைத்த பொருட்களை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடினான்.

பின்னர் இது குறித்து யி போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பான செய்தி அந்த நாட்டு ஊடகங்களில் வெளியானது. இதனால் போலீசார் தன்னை எப்படியும் கைது செய்துவிடுவார்கள் என்று அஞ்சிய கொள்ளையன் ஷியாவ் (வயது 25), தனது தந்தையுடன் சென்று போலீஸ் நிலையத்தில் சரணடைந்தான்.

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க சமயோசிதமாக சிந்தித்து, கொரோனா வைரஸ் பெயரை சொல்லி தப்பிய அந்த பெண்ணை பலரும் பாராட்டி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com