ஈராக்கில் பரிதாபம் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 58 பேர் உடல் கருகி சாவு

ஈராக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 58 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈராக்கில் பரிதாபம் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 58 பேர் உடல் கருகி சாவு
Published on

பாக்தாத்,

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈராக்கும் ஒன்று. அங்கு இதுவரை 14 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பல ஆண்டுகால உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றால் ஈராக்கின் சுகாதார கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஈராக்கின் தென்கிழக்கு பகுதியில் நசிரியா நகரில் உள்ள அல் உசேன் என்கிற ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு திறக்கப்பட்டது.

இந்த வார்டில் கொரோனா நோயாளிகள் 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அல் உசேன் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ சற்று நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதிலும் பரவியது.

இதனால் செய்வதறியாது திகைத்த நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 58 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதிகாரிகளின் அலட்சிய போக்கே விபத்துக்கு காரணம் என கூறி ஆஸ்பத்திரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்களை தீவைத்து எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இந்த தீ விபத்து தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரதமர் அல் காதிமி, ஆஸ்பத்திரியின் தலைமை நிர்வாகி, மாகாண சுகாதார இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரதமரின் உத்தரவின் பேரில் இந்த தீ விபத்து குறித்து அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

ஈராக்கில் இந்த ஆண்டு கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட 2-வது மிகப்பெரிய தீ விபத்து இதுவாகும். கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அரசு அல் காதீப் என்கிற கொரோனா ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 82 நோயாளிகள் உடல் கருகி பலியானது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com